எமது நோக்கு
ஒழுக்கமும் நீதியும் சமத்துவமும் அபிவிருத்தியும் கொண்ட எழில்மிகு பிரதேசமாக கட்டியெழுப்புதல்
எமது இலக்கு
பொது மக்கள் அலுவலர்களுக்கு இடையிலான நல்லுறவை பேணுவதனூடாக உறுதியான சிறந்த நிர்வாக நடைமுறையை ஏற்படுத்துவதை பிரதேச கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்தல்.பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காக கொண்ட தேவைகள் இனங்காணப்பட்டு ஏனைய திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதனூடாக பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்தல்.மனித வலுவையும் தொழில்நுட்ப திறனையும் வினைத்திறன் கொண்டதாக மேம்படுத்துவதன் மூலம் பயனுறுதி மிக்க சேவையை மக்களுக்கு வழங்குதலை உறுதிப்படுத்தல்
யாழ் பிரதேச செயலகத்தின் வரலாறு
யாழ்ப்பாணம் என்ற பெயர் ஓர் நகரத்துக்காகி இன்று குடாநாடு முழுவதையும் குறிப்பதாக உள்ள போதும் யாழ்ப்பாணம் என்பது ஓர் நகரத்தின் பெயராகும். யாழ்ப்பாணமானது பல மணல் திட்டிகளைக் கொண்ட பிரதேசமாக காணப்பட்டது. யாழ்ப்பாண நகரம் முன்னர் மணற்றிட்டி, மணற்றிடல் மற்றும் மணற்றி என்று அழைக்கப்பட்டது. முற்காலத்தில் சோழநாட்டிலிருந்து வீரராகவன் என்ற யாழ் இசைக்கவல்ல கவிஞர் ஒருவன் வருகை தந்து யாழ்மீட்டி கவிபாடியமையால் மகிழ்ந்த ஜெயவீர்ராஜசிங்கன் மன்னன் அக்கவிஞருக்கு பரிசாக இம்மணற்றிட்டி பிரதேசத்தை வழங்கினான். பரிசைப் பெற்ற பாணனாகிய வீரராகவன் இப்பிரதேசத்தில் தானும் தன் உறவினர்களா பாணர்களுடன் குடியேறினான். யாழ் இசைத்து பரிசு பெற்றதாலும் பாணர்கள் இப் பிரதேசத்தில் வாழ்ந்ததாலும், இந்த மணற்றிட்டி என்ற பிரதேசமானது யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது.
இவ்வாறு யாழ்ப்பாண பிரதேசமானது மத்திய தரகாலத்தில் மேல்நாட்டவர் ஆட்சி நிலவியது. அக் காலப்பகுதியில் ஓர் நிர்வாக அமைப்பு முறையினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு உருவாக்கியிருந்த மாகாண நிர்வாக முறையில் ஐந்து நிர்வாக மாவட்டத்தில் ஒன்றாக யாழ்ப்பாணம் காணப்பட்டது. 1798களில் இறைவரி முகவர் (Agent of Revenue) என்ற பெயரைத் தாங்கியிருந்த இந்த நிர்வாக அமைப்பு முறையானது, 1833இல் மாகாண அரசாங்க அதிபர் என மாற்றப்பட்டு வடமாகாணத்தின் நிர்வாக கடமைகள் அனைத்தும் இணைப்பு செய்யப்பட்ட ஓர் மத்திய இடமாக யாழ்ப்பாணம் விளங்கியது. இதில் 1956இல் யாழ்ப்பாணம் பிரதேசமானது இறைவரி அலுவலர் (Divisional Revenue Collector –DRO) அலுவலகமாகக் காணப்பட்டது. கிராமிய கட்ட நிர்வாக முறைமையானது 1963இல் கிராமசேவகர் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. 1972இல் இறைவரி அலுவலர் என்ற முறைமை ஒழிக்கப்பட்டு பிரதேச உதவி அரசாங்க அதிபர் (Assistant Government Agent) முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
1972கள் வரை யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய இரு பிரதேசங்களையும் இணைத்து யாழ்ப்பாண பிரதேச நிர்வாக முறைமை காணப்பட்டது. பின்னர் 1972களில் யாழ்ப்பாணம், நல்லூர் உதவி அரசாங்க அதிபர் பிரதேசங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு யாழ்ப்பாண பிரதேசமானது உயர் திரு. க. மாணிக்கவாசகர் அவர்களை முதலாவது உதவி அரசாங்க அதிபராகக் கொண்ட ஓர் உதவி அரசாங்க அதிபர் அலுவலகமாக மாற்றம் பெற்றது. இக்காலகட்டத்தில் நான்கு கிராம அலுவலக பிரிவுகளைக் கொண்ட ஓர் உதவி அரசாங்க அதிபர் அலுவலகமாக யாழ்பாணம் காணப்பட்டது. 1990களின் பின்னர் கிராம அலுவலர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு 1993.01.01 இல் இப்பிரதேசத்தில் நிர்வாக ரீதியான சனத்தொகை, புவியியல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு 28 கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றம் பெற்று இன்று வரை நடைமுறையில் இருந்து வருகின்றது.
1987களில் மாகாணசபைகள் சட்டத்தினால் உதவி அரசாங்க அதிபர் அலுவல்கள் கடமைகள் மாகாண சபை நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட்டு இருந்து பின்னர் 1992, 58வது சட்ட மூல அதிகாரத்தின் கீழ் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு மாவட்ட கச்சேரிகளிலிருந்த பல அதிகாரங்கள் பிரதேச செயலருக்கு கையளிக்கப்பட்டு இன்று வரை இப்பிரதேச செயலக நடைமுறையில் இருந்து மிகவும் சிறந்த சேவைகளை வழங்குவதுடன் பிரதேச அபிவிருத்தியிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய பிரதேச செயலர்களாகக் கடமையாற்றியோர்
பிரதேச செயலரின் பெயர் |
இருந்து |
வரை |
திரு. க. குணராசா |
01.01.1992 |
16.03.1997 |
திரு. வைத்திலிங்கம் |
17.03.1997 |
31.12.1997 |
திரு. பா. செந்தில்நந்தனன் |
01.01.1998 |
19.06.2005 |
திரு. பற்றிக் டி றஞ்சன் |
20.06.2005 |
13.09.2006 |
திரு. மரியதாசன் ஜேகூ |
24.01.2007 |
04.06.2009 |
திருமதி. சுகுணரதி தெய்வேந்திரம் |
05.06.2009 |
31.03.2016 |